இந்தியா

இறையாண்மையை காக்க இணங்குவோம்...மத்திய அரசுக்கு பணிந்தது சமூக வலைதளங்கள்!!!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை பின்பற்ற பேஸ்புக், கூகுள், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 

கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ம் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது. ஏதேனும் புகார் வரும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிய ஐ.டி. விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என முதலில் குற்றம் சாட்டிய கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள், புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன. 

ஆனால், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டுவிட்டர் நிறுவனம், புதிய விதிகளை பின்பற்றுவது தொடர்பாக எந்த விவரத்தையும் அளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய சட்டத்தை மதிக்க டுவிட்டர் நிறுவனம் கற்றுக்கொள்ள வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார். அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் இந்தியாவில் பெரும் அளவில் லாபமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், சட்டங்கள் முக்கியம் என்றும், இந்தியா அதன் டிஜிட்டல் இறையாண்மையை சமரசம் செய்யாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.