இந்தியா

கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் மீட்பு...

தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் சாக்கடையில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

கேரளா : கொச்சி பனம்பிள்ளி நகரில் சாலையோரமாக தாயாருடன் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், திறந்த நிலையில் இருந்த சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் தவறி விழுந்தான். உடன் சென்ற தாயார் அதிர்ச்சியில் கதறி அழுத நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு சாக்கடையில் விழுந்து கிடந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

சிறுவன் சாக்கடையில் முற்றிலும் மூழ்கியதால் சாக்கடை நீரை குடித்ததுடன், சாக்கடையில் விழுந்ததால் கை கால்களில் காயமும் ஏற்பட்டது.மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான்.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த சிறுவனை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,தற்போது சிறுவனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயுடன் நடந்து சென்ற சிறுவன் மூடப்படாமல் விடப்பட்டிருந்த சாக்கடையில் தவறி விழுந்த காட்சிகளும்,அவன் அப்பகுதியில் இருந்த நபர்கள் மூலம் மீட்கப்பட்ட காட்சிகளும் அந்தப் பகுதியில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது.

தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.