இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றப்பின் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுகிழமையன்று இந்தியா வந்தடைந்த அவரை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து இலங்கை அதிபரை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இரவு ஓய்வுக்குபின் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற இலங்கை அதிபருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அப்போது அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை, இலங்கை அதிபர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு சென்ற இலங்கை அதிபர், அங்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்களுடன், உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி, வணிகம், பொருளாதாரம், முதலீடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் இணைந்து எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பில் முதலீடுகளை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையே மின்சார பரிமாற்ற தொடர்பு, பெட்ரோலியம் பைப்லைன் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக பேசுகையில், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய இந்த வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.