இந்தியா

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்கள்... மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்...

கடந்த 2019-2020-ம் கல்வியாண்டில் 25% பழங்குடியின மாணவர்களும், 20% தலித் மாணவர்களும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Malaimurasu Seithigal TV
நாடு முழுவதும் ஒவ்வோர் கல்வியாண்டிலும், பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் புதிதாக சேருகின்றனர், எத்தனை மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை UDISE மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2019-2020-ம் கல்வியாண்டுக்கான UDISE தரவுகள் அண்மையில் வெளியானது.
அதில், நாடு முழுவதும் 25% பழங்குடியின மாணவர்கள் 9, 10-ம் வகுப்புகளை முடிக்காமலேயே வெளியேறியதாகவும், 20% தலித் மாணவர்கள் 9,10-ஆம் வகுப்புகளில் இருந்து இடை நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் 34.4%, மத்திய பிரதேசத்தில் 26.8%, குஜராத்தில் 24.1%, ஒடிஷாவில் 24%, டெல்லியில் 21.5% என்ற அளவில் 9, 10-ஆம் வகுப்புகளில் பட்டியலின மாணவர்கள் இடை நின்றுள்ளனர்.
பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடைநிற்றல் சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும், ஆனாலும் கேரளாவில் ஐந்தில் ஒரு பழங்குடி மாணவரும், தமிழ்நாட்டில் ஐந்தில் மூன்று பழங்குடி மாணவரும் பள்ளியை விட்டு 9,10-ஆம் வகுப்புகளில் இடைநின்றுள்ளதாகவும் UDISE புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சராசரியாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை என்பது 16.1% ஆக உள்ளது.
தலித் மாணவர்களை விட பழங்குடி மாணவர்களை பள்ளிகளில் தொடர்ந்து தக்கவைக்க ஏதுவான சமூக, பொருளாதார, கற்றல் - கற்பித்தல் சூழல் இல்லாததே மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்க காரணம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.