Super El Niño 2026 
இந்தியா

15 ஆயிரம் உயிரை காவு வாங்க போகிறதா எல் நினோ? இந்தியாவிற்கு 'அலர்ட்' கொடுக்கும் விஞ்ஞானிகள்!

தற்போது இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வால் 450,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Vinvizhi Leninton

எல் நினோ தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது 'சூப்பர் எல் நினோ' காரணமாக வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 450,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று அறிவியலாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது உலகளவில் விவாதத்திற்குள்ளான நிலையில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 180-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும், இந்தியாவிற்கு வரவிருக்கும் "சூப்பர்" எல் நினோ நிகழ்வானது நாட்டின் இயற்கை அமைப்புகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்ததோடு, அதனை எதிர்கொள்ள தயாராகுமாறும் சக ஆராய்ச்சியாளர்களையும், களப்பணியாளர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வால் 450,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்தோனேசியா முதல் இந்தியா வரையிலும், நைஜீரியா முதல் அமெரிக்கா வரையிலும் உலகம் முழுவதும் தாக்கும் இந்த சூப்பர் எல் நினோ தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எல் நினோ கொண்டுவரும் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் மேலும் பல மரணங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல நாடுகளில் வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தாலும் ஏற்கனவே மரணம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிகழ்வுகளை விட தற்போது இந்த வெப்பமடைதலானது மிகவும் அதிகமாக இருப்பதால், விஞ்ஞானிகள் இதை "வியக்கத்தக்கது" என்று கூறியுள்ளனர். எல் நினோ இயற்கையான காலநிலை நிகழ்வுகளாகும், ஆனால் புவி வெப்பமயமாதலால் அவை மேலும் மோசமடையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "குறிப்பிடப்பட்டுள்ள 451,000 பேர் என்ற மதிப்பீடு, நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கை" என்று காலநிலை தாக்க ஆய்வகத்தின் இணை நிறுவனரும், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், பேராசிரியர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு வாரியாக எத்தனை பேர் இறக்க வாய்ப்பிருக்கும் என்பதை தெரிவித்துள்ளனர். மேலும், அந்த அட்டவணையில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது, அதுவும் 4-வது இடத்தினை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆறு மாத கால மதிப்பீட்டின்படி வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 15,800-ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 7,400 இறப்புகள் டிசம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் நிகழக்கூடும் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீட்டில், சுமார் 1,600 இறப்புகள் வரையிலான நிச்சயமற்ற தன்மை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில், அதிகபட்ச எண்ணிக்கையாக நைஜீரியாவில் 31,400 மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் 19,300, சூடானில் 17,500 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பிரேசில் 13,300 மரணங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் தலா சுமார் 10,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாட் நாட்டில் 7,900, பிலிப்பைன்ஸில் 6,500 மற்றும் தெற்கு சூடானில் 5,600 என மதிப்பிடப்பட்டுள்ளது.

எல் நினோ குறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், "நமது எதிர்காலத்திலிருந்து வரும் ஒரு அஞ்சல் அட்டை" என்றும், இது 20 ஆண்டுகளில் காலநிலை நெருக்கடியால் வெப்பநிலையை உயர்ந்திருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்