தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் சிக்கோட்டி பிரவீன். தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் அவருக்கு நண்பர்களாக உள்ளனர்.தொழிலதிபரான சிக்கோட்டி பிரவீன் வளர்ப்பு பிராணிகள் மீது பெரும் காதல் கொண்டவர் என்று கூறப்படுகிறது. தனக்கு நண்பர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சூதாட்டம் நடத்துவது சிக்கோட்டி பிரவீனின் வழக்கம். அவ்வப்போது நடைபெறும் சூதாட்டத்தை பிரபலப்படுத்த நடிகர், நடிகைகளை அவர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சூதாட்டம்
இந்த ஆண்டு ஜூன் மாதம் நேபாளம் நாட்டில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரவீன் சூதாட்டம் ஒன்றை நடத்தினார். இதற்காக முக்கிய பிரமுகர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவில் இருந்து அங்கு அழைத்து சென்றார்.
சூதாட்டத்தில் வென்றவர்களுக்கு உரிய பணம் ஹவாலா மூலம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஹைதராபாத் மற்றும் ஆந்திர மாநிலம் ஆகியவற்றில் அவர் தொடர்புடைய எட்டு இடங்களில் வருவாய் புலனாய்வுத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர்களுக்கு தொடர்பு
மேலும் சூதாட்டத்தை பிரபலப்படுத்த நடிகர், நடிகைகளை அவர் ஒப்பந்தம் செய்து பயன்படுத்தியதும் வருவாய் புனனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக பிரபல பாலிவுட் மற்றும் டாலிவுட் நடிகர், நடிகைகளான மல்லிகா செராவத்திற்கு ஒரு கோடி ரூபாயும், அமிஷா பட்டேலுக்கு 80 லட்சம் ரூபாயும், கதாநாயகன் கோவிந்தாவிற்கு 50 லட்சம் ரூபாயும், நடிகைகள் ஈஷா ரீபாவிற்கு 40 லட்ச ரூபாயும், டிப்பிள் ஐடிக்கு 40 லட்ச ரூபாயும் அவர் பணம் வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தவிர சூதாட்டத்தை பிரபலப்படுத்திய மேலும் பலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெருமளவு பணம் ஹவாலா மூலம் வழங்கப்பட்டதும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. எனவே ஆகஸ்ட் முதல் தேதி அன்று பிரவீன் அவருடைய நண்பர் மாதவர் ரெட்டி ஆகியோர் விசாரணைக்காக ஹைதராபாத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ணை வீட்டில் சோதனை
இந்த நிலையில் மகபூப் நகர் மாவட்டம் கட்தால் அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிகோடி பிரவீனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வனத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறமான வகையில் மலைப்பாம்புகள், பறவைகள், அபூர்வ பறவைகள், குதிரைகள், நாய்கள்,ராட்ஷத பல்லிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உரிய அனுமதி பெற்ற பின் மட்டுமே இந்த வன உயிரினங்களை நான் வளர்ந்து வருகிறேன் என்று சிக்கோட்டி பிரவீன் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.
வனத்துறை விசாரணை
அபூர்வ பறவைகள், மலை பாம்புகள், மஞ்சள் நிற பாம்பு, ராட்ஷத பல்லிகள் ஆகியவை போன்ற உயிரினங்களை வளர்க்க சிகோடி பிரவீன் வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்று இருக்கிறாரா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கோட்டி பிரவீன் நடத்திய கேசினோ சூதாட்டத்தில் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் நேபாளம் சென்று கலந்து கொண்டிருப்பது தற்போது இரண்டு மாநிலங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.