இந்தியா

தாவூத் இப்ராஹீமின் சகோதரர் உதவியுடன் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 6 பேர் கைது...

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 6 பேரை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Malaimurasu Seithigal TV

தீபாவளி , தசரா, ஆயுத பூஜை, உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதையொட்டி, இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டுள்ளதாக டெல்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் டெல்லி காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹீமின் சகோதரரான அனீஸ் இப்ராஹீம் இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் தாக்குதல்களை நிகழ்த்த அனீஸ் இப்ராஹீம் நேரடியாக நிதி வழங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், பயங்கர வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர், சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்து பாகிஸ்தானில் உள்ள தாட்டா பகுதிக்கு சென்றதாகவும், அங்கு அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உடையில் இருந்த இருவர் 15 நாட்கள் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாபெரும் தாக்குதல் சதிதிட்டத்தை டெல்லி போலீசார் முறியடித்துள்ள நிலையில் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.