இந்தியா

மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களை பதவி இழக்கச்செய்யும் மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கே ஆபத்தானது!!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட தலைவர்களை பதவி இழக்கச்செய்வதன் மூலம் அரசியலமைப்பின் மாண்பை ....

மாலை முரசு செய்தி குழு

கட்டுரை: தரணிதரன், அரசியல் விமர்சகர்

கடந்த ஆகஸ்ட் 20 -ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிந்த அரசியலமைப்பு (130 -வது திருத்தம்) மசோதா, 2025, பிரிவுகள் 75, 164 மற்றும் 239AA ஆகியவற்றில் சில முக்கியமான திருத்தங்களை கொண்டுள்ளது.

மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க நேரிட்டால் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தலைவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதை இந்த மசோதா உறுதி செய்கிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மிகத் தீவிரமான மற்றும் காத்திரமான விவாதத்தை கிளப்பியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. பாஜக -வின் கூட்டணியில் இருக்க கூடிய தெலுங்கு தேசம் கட்சி உட்பட இந்த மசோதா குறித்து சில குறிப்பிட்ட விமர்சனங்களை முன் வைத்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட தலைவர்களை பதவி இழக்கச்செய்வதன் மூலம் அரசியலமைப்பின் மாண்பை காப்பதாக பாஜக சொன்னாலும், ‘இது வாக்காளர்களின் முடிவை குறைத்து மதிப்பிடும் செயல்' என அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அமலாக்கத்துறை (ED) மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) உள்ளிட்ட தேசிய நிறுவனங்களில் காணப்படும் கட்சி சார்பு தன்மைகள் (பாஜக சார்புத்தன்மை) இந்த மசோதா மீதான நம்பிக்கையை குலைப்பதோடு மசோதாவின் ‘ஊழல் எதிர்ப்பு’ நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கேள்விக்குள்ளாகும் அமலாக்கத்துறையின் மீதான நம்பகத்தன்மை!

இந்தியாவில் அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் பொது மக்களிடம் மட்டுமல்லாது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தில்) ED நடத்திய சோதனை குறித்து மே -22 அன்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் “அமலாக்கத்துறை தனது அனைத்து வரம்புகளை மீறிவிட்டது. மேலும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை முற்றிலுமாக மீறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், ஆகஸ்ட் -7 அன்று, நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, 2022 - விஜய் மதன்லால் சவுத்ரி தீர்ப்புக்கு எதிரான மனுக்களை விசாரித்தபோது, ‘​​அமலாக்கத்துறை மோசடியாளர்களைப் போல நடந்து கொள்கிறது’ என்று கடுமையாக சாடியிருந்தது.

அரசியல் தலைவர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை சார்பில் 193 வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதில் வெறும் 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 18 -ஆம் தேதி ஒன்றிய அரசு ராஜ்ய சபாவில் பகிர்ந்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வெறும் 1% குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டு தண்டை வாங்கித்தரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிந்த வழக்குகள் அனைத்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது என்பதுதான் இதில் இன்னும் கவலைக்குரிய விஷயமே.

இதற்கு ஒரு முக்கியமான உதாரணம் தான் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது. இவர் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பிறகே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகள் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. அமலாக்கத்துறை கையாளும் வழக்குகள் காவல் துறை சட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. PMLA (Prevention Of Money Laundering Act) வழக்குகளில், ‘தான் குற்றவாளி அல்ல’ என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீதே உள்ளது. மேலும் பிரிவு 45 இரட்டை நிபந்தனைகளை முன்வைக்கிறது: குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல என்றும், அவர் மேலும் குற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அமலாக்கத்துறை வழக்குகள் மற்ற குற்ற வழக்குகளை(உதாரணமாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளவை -IPC) போல் அல்ல. யார் மீதேனும் சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை போட்டால், அந்த குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பும் அதனுடையதுதான்.

பாஜக -வின் இந்த பதவி பறிப்பு மசோதா ‘அரசியல் ஊழலை’ தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது என பாஜக ஆதரவாளர்கள் கூறினாலும், தரவுகள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தை திறக்கின்றன. பாஜக ஆட்சிக்காலத்தில் ஒரு ஆபத்தான போக்கு உருவாகியுள்ளது. கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மக்களவை உறுப்பினர்களின் விகிதம் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது, 2009 இல் 14% ஆக இருந்த 2024 இல் 31% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த வழக்குகளில் பாஜக எம்.பி - களும் சிக்கியுள்ளனர். பாஜக -வின் 63 எம்.பி.க்கள் (அதன் மொத்தத்தில் 26%) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். இதில் 19 பேர் கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என மோசமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஒருவேளை கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் மற்றும் அமைச்சர் சுகந்தா மஜும்தார் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. 2021 அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நியமிக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக், கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் உட்பட 14 நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டார்.

கடுமையான குற்ற பின்னணி கொண்ட பாஜக எம்.பி -கள் தொடர்ந்து பதவியில் நீட்டித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக அவர்கள் கொண்டு வந்த மசோதாவானது ‘குற்ற செயலில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த வெளிப்படையான முரண்கள் தான் மசோதா கொண்டுவரப்பட்டதன் உண்மையான நோக்கமே நாட்டின் கூட்டாட்சி முறையை நசுக்குவதுதானா? என்ற சந்தேகத்தை விமர்சகர்கள் மத்தியில் வலுவாக எழுப்பி வருகிறது.

அரசியலமைப்புக்கு ஏற்பட்ட நெருக்கடி!

‘இந்தியா அதன் மாநிலங்களின் ஒன்றியம். வளமான இன-மொழி பன்முகத்தன்மையை உள்ளடக்கிய மாநிலங்களின் ஒற்றுமை தான் இந்தியாவின் அடித்தளம் என்பதை அரசியலமைப்பின் பிரிவு 1, தெளிவாக வலியுறுத்துகிறது.

அரசியலமைப்பு ஒன்றிய அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரங்களை தெளிவாக வரையறுக்கிறது, முதலமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதிலும், நிர்வகிப்பதிலும் ‘ சுயாட்சி உரிமையை’ மாநிலங்கள் பெற்றுள்ளன. இந்த கூட்டாட்சி தத்துவத்தை நீதிமன்றம் 2 முறை உறுதி செய்துள்ளது. கேசவானந்த பாரதி - கேரள மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் 1973 -ல் உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில் கூட்டாட்சி தத்துவத்தின் ‘அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை’ உறுதி செய்தது.

1994 -ல் அன்றைய முதல்வர் எஸ்.ஆர் பொம்மைக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் இடையிலான விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்பு நீதிமன்றத்தால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு தீர்ப்புகளும் கூட்டாட்சி முறையை அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் உள்ளார்ந்த அம்சமாக அங்கீகரிக்கின்றன. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கூட்டாட்சி முறையை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்பதை இந்த தீர்ப்புகள் உறுதி செய்கின்றன, இது தேசிய ஒற்றுமைக்கும் மாநில சுயாட்சிக்கும் இடையிலான சமநிலையைப் பாதுகாக்கிறது. இருப்பினும், இந்த மசோதா மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையோ அல்லது அவரது அமைச்சரவை உறுப்பினர்களையோ பதவி நீக்கம் செய்ய அதிகாரத்தையும் அளிக்கவே செய்கிறது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களிடமிருந்து எந்த சட்டப்பூர்வமான அங்கீகாரத்தையும் பெறாத ஒரு நியமனதாரர் (ஆளுநர்) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை எப்படி பதவி நீக்கம் செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே மீறும் செயல்முறை ஆகும்.

முதலமைச்சரே மாநிலத்தின் அரசாங்க நிர்வாகத்தின் தலைவர். முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைப்பதற்கும் வழிவகுக்கும், இதன் விளைவாக மறைமுகமாக ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்படலாம், இது பிரிவு 356 -ன் கீழ் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை மீறலாம்.

இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடாக அறியப்படுகிறது. இங்கு குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை - சட்டமன்றத்திற்கான சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் - தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் மக்களின் ஆணையை உள்ளடக்கிய முதலமைச்சர் மற்றும் பிரதமரைத் தேர்வு செய்கின்றனர். ஒரு முதலமைச்சர் அமைச்சரை நியமிக்கும் அல்லது பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஒன்று மக்களிடம் இருக்க வேண்டும். அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்சொன்ன பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் பிரதிநிதிகளே வாக்காளர் விருப்பத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால், அதனை அடுத்தடுத்த தேர்தலில் வாக்குகள் மூலம் மக்கள் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையோ, அல்லது அமைச்சரையோ குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்வது ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் அபாயகரமான பாதைக்கு இட்டுச்செல்லும் போக்கு. இந்தியாவில் நீதித்துறை நடைமுறைகள் மிகவும் மெதுவாக உள்ளது. 70% கைதிகள் விசாரணைக் கைதிகளாகவும், அரசியல் வழக்குகளில் தண்டனை விகிதம் 5% -க்கும் குறைவாகவுமே உள்ளது. ஒரு அமைச்சர் குற்ற வழக்கில் கைதாகி 30 நாட்களுக்கு மேல் சிறை சென்று பதவி இழந்த பிறகு, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால், அது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும்.

இயற்கை நீதிக்கு புறம்பானது!

வெறும் சந்தேகம் மற்றும் தடுப்புக்காவல் அடிப்படியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை பணிநீக்கம் செய்வது இயற்கை நீதியை மீறும் செயலாகும். எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் நியமமான விசாரணை மற்றும் சட்ட உதவிகளை பெரும் உரிமை உண்டு.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேர்தல் தடையுடன் இதை நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. வெறும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் தண்டனை பெற்ற ஒருவருக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதே அரசின் நோக்கமாக இருந்திருந்தால், அதன் முதன்மை கவனம் நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்தில் இருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக விரைவான நீதி கிடைக்க வழி பிறக்கும். பழமொழி கூறுவது போல, ‘தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்’

இந்தியாவில், நாடு முழுவதும் 50 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில குற்ற வழக்குகள் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும்.. உலகிலேயே 1.40 பில்லியன் மக்கள் வாழும் நாட்டிற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட நாடு இந்தியாதான். எனவே, அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிப்பதற்கான நீண்டகால தீர்வு நீதித்துறை செயல்முறையை சீர்திருத்துவதேயாகும். அதிக நீதிபதிகளை நியமித்து , நீதிமன்ற வசதிகளை மேம்படுத்தி,, நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கவதன மூலம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த இயலும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.