இந்தியா

மணீஷ் சிசோடியாவை 10 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை மனு: வழக்கை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Tamil Selvi Selvakumar

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, வரும் 20ம் தேதி வரை CBI காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் காவலில் 10 நாட்கள் அவரை விசாரிக்கக் கோரிய மனு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மணீஷின் பெயரில் வேறுநபர்கள் சிம்கார்டுகள் வாங்கியதாகவும், சம்மன் அனுப்பப்பட்டோரை அடையாளம் காண சிசோடியா தேவை எனவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவரது வருமானப் பரிவர்த்தணை, அளிக்கப்பட்ட தகவல்களுக்கு மாறாக உள்ளதாகவும், லாப வரம்பு இரு மடங்காக உயர்ந்ததாகவும் கூறி, விசாரணைக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த மனு மீதான உத்தரவை ஒத்திவைத்த நீதிபதிகள், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணையையும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.