இந்தியா

இந்தியாவின் முதல் கடல்சார் தியேட்டர் கட்டளை.. 2022 சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்க மத்திய அரசு திட்டம்!!

Tamil Selvi Selvakumar

இந்தியாவின் முதல் கடல்சார் தியேட்டர் கட்டளை குறித்த அறிவிப்பை வரும் சுதந்திர தினத்தன்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடல்சார் தியேட்டர் கட்டளை என்பது ஒரு ராணுவக் கட்டமைப்பாகும். இதில் ஒரு குறிப்பிட்ட போர் அரங்கில் உள்ள ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் அனைத்து சொத்துக்களும் மூன்று நட்சத்திர ஜெனரலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

அதாவது போர் காலங்களில் நாட்டின் முப்படைகளையும் ஒரே தளபதியால் இயக்கப்பட்டு போரை சமாளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து முப்படைகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது.

முப்படை தலைமை தளபதி மறைவுக்கு பிறகு இந்தியக் கடற்படையின் மூத்த தரவரிசை அதிகாரி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் முதல் கடல்சார் தியேட்டர் கட்டளை குறித்த அறிவிப்பை 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.