இந்தியா

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பின்கீழ் வருமா..?   ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், 20 மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக காணொலி காட்சி வழியாக அல்லாமல், நேரடியாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு காரணம், மத்திய, மாநில அரசுகளின் வரிகள்தான். எனவே, பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும், ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து, இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு, ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வந்தால், மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 32 ரூபாய் 80 பைசாவும், டீசல் மீது 31 ரூபாய் 80 பைசாவும் மத்திய அரசு உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு தருவதில்லை. ஆனால் ஜி.எஸ்.டி. என்றால் இரு தரப்பும் தலா 50 சதவீதம் என்ற அளவுக்கு சரக்கு, சேவை வரியை பகிர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.