திறந்தவெளி மலம் கழித்தலை தடுத்திடும் வகையில், பிரதமர் மோடி அரசு கழிவறை கட்டுதலை ஊக்குவித்து வருகிறது. இதன் பயனாக இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலை உருவாகியிருப்பதாக கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் இன்னமும் 19 சதவிகிதம் பேருக்கு கழிவறை வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. கடந்த 2015-16 ஆண்டில் 39 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், கழிவறை பயன்பாட்டில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்கள் பின்தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர 8 சதவீத குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினருடன் கழிவறைகளை பகிர்ந்து கொண்டு வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவில் 58 சதவீத குடும்பத்தினர் சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் 66 சதவீதம் குடும்பத்தினரும், நகர்ப்புறங்களில் 44 சதவீதம் குடும்பத்தினரும் சுத்திகரிக்கப்படாத குடிநீரை பருகுகின்றனர்.
நாட்டில் 41 சதவீதம் மக்கள், தங்களது வீடுகளில் சமைப்பதற்கு விறகு, வறட்டி போன்ற திட எரிபொருள்களை பயன்படுத்தி வருவதாகவும், இதன்மூலம் 25 சதவீதம் குடும்பத்தினர் தினமும் வீட்டு அடுப்பிலிருந்து வெளியாகும் புகையை சுவாசிக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.