இந்தியா

காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு!காரணம் இதுதான்...

Tamil Selvi Selvakumar

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியை கடந்தது. நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. நண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் மழை அளவு அதிகரித்ததை அடுத்து காவிரியில் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. 

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பிரதான அருவி, சினிபால்ஸ் அருவி, ஐவர் பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பாறைகள் படிப்படியாக மூழ்கத் தொடங்கியுள்ளன. மேலும், வெள்ள நீர் அதிகரித்த காரணத்தால் பரிசல் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டு, ஒகேனக்கல் பரிசல் துறை பூட்டப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணையின் நீர்வரத்தும் 10 ஆயிரம் கன அடியிலிருந்து 12ஆயிரத்து 440 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை 64.80 அடியாக சரிந்து இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 64.90 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.47 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.