இந்தியா

உலக நாடுகளுக்கு இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்தது...பெருமிதம் தெரிவித்த பிரதமர்!

Tamil Selvi Selvakumar

விமான கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது, இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதை காட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பெங்களூருவின் எலகங்கா விமானபடை தளத்தில் 14-வது  'ஏரோ இந்தியா'  விமான கண்காட்சியை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து விமானங்களின் கண்கவர் சாகசங்களை கண்டு களித்த பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்த விமான கண்காட்சியில் பங்கேற்பது, முந்தைய சாதனைகளை முறியடித்திருப்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு, தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும்  விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றிருப்பது நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது எனவும், இந்தியாவின் விரிவாக்க திறனுக்கு விமானக் கண்காட்சி ஒரு எடுத்துக்காட்டு எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.