இந்தியா

ஆறு மணி நேரத்தில் ரூ.2 லட்சம் அபராதம் வசூல் செய்த காவலர்

அதிகபட்சமாக ஒரு கார் ஓட்டுனரிடமிருந்து மட்டும் 36,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

பெங்களூரில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஒரே நாளில் 2.04 லட்சம் அபராதத் தொகையை காமாக்‌ஷிபாலயா காவல் நிலைய போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் ஒருவர் வசூல் செய்துள்ளார். பெங்களூர் காமாக்‌ஷிபாலயா போக்குவரத்து காவல் நிலையம் தனது டிவிட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து துணை ஆய்வாளர் சிவன்னா தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் நேற்று ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சந்திப்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 249 வாகன ஓட்டிகளிடமிருந்து 2.04 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்த தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு கார் ஓட்டுனரிடமிருந்து மட்டும் 36,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் கடந்த 6 மாதங்களில் 36 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது.

வாகனங்களை ”நோ-பார்கிங்கில்” நிறுத்தியது, சிக்னல்களில் நிற்காமல் சென்றது மற்றும் தலைக்கவசம் அணியாமல் சென்றது போன்றவற்றுக்காக அதிகமாக அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 - ஜோஸ்