கடந்த ஜூலை 21 - ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்திருந்தார். அவரின் ராஜினாமா கடிதத்தையும் குடியரசு தலைவர் திரௌபத்தி முர்மூ ஏற்றுக்கொண்டிருந்தார்.
தன்கருக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போதே அவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் குடியரசு துணை தலைவர் பதவி காலியாகிருந்தது. துணை குடியரசு தலைவர் ராஜினாமா செய்தால் அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்த சூழலில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் -ஐ பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
பாஜக -வின் வியூகம்
சி.பி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தனது இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபாட்டோடு விளங்கினார். தனது 16 -ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தன்னை இணைத்து கொண்டார்.
ஜூலை 31, 2024 முதல் தற்போது வரை மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக அவர் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தமிழரான ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலை எல்லாம் கடந்து கொங்கு மண்டலத்தை குறிவைப்பதாக தெரிகிர்து. ஏற்கனவே திமுக கொங்கு மண்டலத்தில் பலவீனமாகத்தான் உள்ளது. கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை வேட்பாளராக மாற்றுவதன் மூலம் பாஜக -விற்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதைதான்.
ராதாகிருஷ்ணனுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருப்பதால், நேரடியாக திமுக -வால் அவர்களை எதிர்க்க முடியாது.
மேலும் இவரை துணை ஜனாதிபதியாக்குவதன் மூலம் ,நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அதிக அழுத்தத்தை தர முடியும் என்று பாஜக தலைமை சிந்திப்பதாக தகவல் வெளியாகின்றன.
இதனை உறுதிப்படுத்துவிதமாக “சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்.காரர். அவரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வது எப்படி என தெரியவில்லை. அவர் ஊழல்வாதி கிடையாது.ஆர்.எஸ்.எஸ்.க்காரர் தானே. அந்த அமைப்பு நல்ல வாழ்க்கை முறையை ஏற்பவர்கள். திமுகவில் 7 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
சி.பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சார்ந்தவராக தமிழராக பார்க்கவில்லையா? அதனால் ஆதரவு தர வேண்டும். ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ் பற்று என்ற வேஷம் கலைந்து விடும்” என தமிழிசை பேசியுள்ளார்.
மேலும் பல பாஜக தலைவர்கள் எழுதி கொடுத்தாற்போல சி.பி.ஆர் -ஐ ஆதரிக்காவிட்டால், தமிழர்களே இல்லை என்ற ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இடையில்தான், காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளோடு கலந்து ஆலோசித்து, தென் இந்தியாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சுதர்ஷன் ரெட்டி இந்தியா கூட்டணியின் பொது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது.
திமுக ஆதரவு யாருக்கு!?
உண்மையில் சொல்லப்போனால் திமுக -விற்கு இது சற்று சிக்கலான இடம்.
கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் ஏற்கனவே பலவீனமாக உள்ள திமுக -வை மேலும் பலவீனமாக்க முடியும். மேலும் தமிழரான சி.பி.ஆர் -ஐ ஆதரிக்காமல் தெலுங்கரான சுதர்ஷன் ரெட்டியை ஆதரித்தால் உங்கள் தமிழ்ப்பற்று என்னவானது என திசை திருப்ப முடியும். எது எப்படி இருந்தாலும் திமுக -வை வருகிற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என பாஜக முயல்கிறது. ஒருவேளை பாஜக சொல்வதை போல தனது தமிழ் பற்றை நிரூபிக்க முயன்று திமுக சி.பி.ஆர் -ஐ ஆதரித்தால் கட்டாயம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும். காங்கிரஸ் விலகுவதால் மட்டும் திமுக -விற்கு ஆபத்து இல்லை, அது விலகி விஜய் -ன் தமிழ வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டால், திமுக அதிமுக என அனைவருக்குமே ஆபத்துதான்.
எனவே இந்த தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க திமுக சுதர்ஷன் ரெட்டியை ஆதரிப்பதுதான் நல்ல வழி. திமுக -வும் சுதர்ஷன் ரெட்டியை தான் ஆதரிக்கும்போல தெரிகிறது அதற்க்கு காரணம் திமுக -வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் நேற்று பேசுகையில் “என்னதான் தமிழராக இருந்தாலும், அவர் ஆர்.எஸ்.எஸ் காரர் அதன் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்” என பேசியிருந்தார். இதன் மூலம் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளரை தான் ஆதரிக்கும்போல் தெரிகிறது.. ஆனால் செப். 9 ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.