இந்தியா

பிணியால் இறந்துப்போன மகள்...ஹெல்புக்கு வராத ஆம்புலன்ஸ்...உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை!!

இறந்த மகளின் உடலை தந்தை 10 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டிற்கு தூக்கி செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Selvi Selvakumar

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவருக்கு சுரேகா என்ற மகள் உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாகவே இவரது மகள் சுரேகா அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதனால் ஈஸ்வர் தாஸ் தனது மகளை அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமடைந்து விட்டதால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் பதிலால் வேதனை அடைந்த ஈஸ்வர் தாஸ் தனது மகளின் உடலை தோளில் சுமந்தவாறே 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத்தொடர்ந்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி, நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். மேலும் சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.