இந்தியா

“ஒரே அலையில் அடித்துச் சென்ற இரு உயிர்கள்!” - விரைவில் மணமகனாக இருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. நண்பர்கள் தினத்தில் நடந்த விபரீதம்!

தாமோதர் என்ற இளைஞர், நீத்துவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என உடனடியாக கடலுக்குள் சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

விசாகப்பட்டினத்தில் நண்பர்கள் தினத்தன்று கடற்கரைக்கு புகைப்படம் எடுக்கச் சென்ற இளம்பெண், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பெடகாந்தியாடா மண்டலத்திற்குட்பட்ட பட்டா கங்காவரம் கடற்கரைக்கு, நண்பர்கள் தினத்தையொட்டி நேற்று காலை நான்கு இளம்பெண்கள் மற்றும் மூன்று இளைஞர்கள் கொண்ட குழுவினர் முன்தினம் திட்டமிட்ட படி புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.

7 பெரும் சரியாக 8 மணியளவில் கங்காவரம் கடற்கரைக்கு, சென்ற நிலையில் அங்கு புகைப்படங்கள் எடுக்கும் பெரிய பாறையின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பெரிய அலை அடித்துள்ளது. அதில் ஜலாரிப்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான நீத்து என்ற இளம்பெண் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட பெண்டுர்த்தியைச் சேர்ந்த தாமோதர் என்ற இளைஞர், நீத்துவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என உடனடியாக கடலுக்குள் சென்றுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நியூ போர்ட் காவல்துறையினர், நீண்ட தேடுதலுக்கு பிறகு இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நீத்து, இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து வந்த மாணவி எனத் தெரியவந்துள்ளது. அதேபோல், அவரை காப்பாற்ற சென்று உயிரிழந்த தாமோதருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கனக மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தாமோதருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் நண்பர்களுடன் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியூ போர்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் தினத்தன்று கடற்கரையில் ஏற்பட்ட இந்த இரட்டை உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.