மகாராஷ்டிராவில் அதானி குழுமம் மேற்கொண்டு வரும் பிரம்மாண்ட மின்சாரத் திட்டத்தின் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) முன் அனுமதி பெறாமலேயே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு ரூ.5,675 கோடியிலிருந்து ரூ.56.75 கோடியாகக் குறைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பணிகளை நிறுத்தும் உத்தரவும் வெளியாகியுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் இந்த மின்சாரத் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் 1,500 மெகாவாட் திறன் கொண்ட தாரலி பம்ப்டு ஸ்டோரேஜ் மின் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பாட்டன் தாலுகாவில் உள்ள தாரலி அணையின் நீர்த்தேக்கத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. நிவாடே, தொண்டோஷி, கலம்பே மற்றும் ஜாலு ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கிய 150.74 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் அமையவுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், மின்சாரத்தைச் சேமித்து தேவையான நேரத்தில் மீண்டும் உற்பத்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களில், மின்சாரம் அதிகமாகக் கிடைக்கும் நேரத்தில் தண்ணீரை கீழ்நிலை நீர்த்தேக்கத்திலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத்திற்குப் பம்ப் செய்து சேமிப்பார்கள். மின்சாரத் தேவை அதிகரிக்கும் நேரத்தில் அந்தத் தண்ணீரை மீண்டும் கீழே திறந்து டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பார்கள். இதனால் மின்சாரத் தேவையைச் சமாளிக்க உதவும்.
கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுற்றுச்சூழல் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் திட்டத்தின் மதிப்பு ரூ.5,675 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சரணாலயப் பராமரிப்புக்காகத் திட்ட மதிப்பில் 4 சதவீதமான ரூ.227 கோடியைச் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்திற்குச் செலுத்த வேண்டும் என வனத்துறை தெரிவித்திருந்தது. கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் திட்டத்தின் மதிப்பீட்டை ரூ.56.75 கோடியாகக் குறைக்கக் கோரியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
இதனால் வனவிலங்கு பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் ரூ.227 கோடியிலிருந்து சுமார் ரூ.2.27 கோடியாகக் குறையும் நிலை ஏற்பட்டது. இதன்படி நிறுவனம் ரூ.56.75 லட்சத்தை முதற்கட்டமாகச் செலுத்தியிருந்தது. மீதமுள்ள தொகையை தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி கிடைத்த பிறகு செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சதாரா மாவட்டத்தின் கௌரவ வனவிலங்கு பாதுகாவலர் ரோஹன் படே புகார் அளித்திருந்தார். திட்டத்தின் உண்மையான செலவு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து நவம்பர் 6ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்தப் புகாரை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க மகாராஷ்டிர வனத்துறைக்கு உத்தரவிட்டது.
நவம்பர் 13ஆம் தேதி மகாராஷ்டிர வனத்துறை திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது விதிமீறல் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மூன்று நாட்களுக்குள் இதுகுறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் வனச்சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் மறுத்துள்ளது. ரூ.56.75 கோடி என்பது முழுத் திட்டத்தின் செலவு அல்ல என்றும், இடத்தை ஆய்வு செய்வது மற்றும் சர்வே பணிகளுக்கான செலவை மட்டுமே குறிப்பதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மொத்த திட்ட மதிப்பு ரூ.5,675 கோடியாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், திட்டம் தனியாருக்குச் சொந்தமான வனமல்லாத நிலத்தில் அமைவதாகவும், கோய்னா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது வனத்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியும் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, இந்தத் திட்டத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் மின்சார உற்பத்திக்கான பெரிய திட்டம்; மறுபக்கம் வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் திட்டச் செலவு தொடர்பான சர்ச்சைகள். விசாரணையின் முடிவில்தான் இந்த விவகாரத்தின் முழு உண்மை தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.