ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
விசர் தொப்பிக்குக் கீழே தலையைச் சுற்றி பேட்மேன் பந்தனாவைக் கட்டிக்கொண்டு, காதுகளில் பல சிறிய, தமிழ் பாணியிலான தங்கக் கம்மல்கள் அணிந்திருந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையின் ஃபேஷன் அரங்கின் கவனத்தை ஈர்த்தது.
ஜப்பானில் உள்ள ஐச்சி மாகாண பொது துப்பாக்கிச் சுடும் அரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தனிப் போட்டியாளராகவும், சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோருடன் அணியாகவும் பங்கேற்று, 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த ஹினாட்டா தைச்சி 253.0 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 252.4 புள்ளிகள் பெற்றிருந்த இளவேனில், நூலிழையில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டுள்ளார். எனினும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பான் ஹியோ-ஜின்னை 3-வது இடத்துக்குத் தள்ளியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பிறந்த இளவேனில், சிறுவயதில் பெற்றோருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியேறினார்.
சிறுவயது முதலே விளையாட்டில் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. ஆரம்பத்தில் குறுகிய மற்றும் நீளமான ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று வந்த இவர், 14 வயதில் தீவிரமாகத் துப்பாக்கிச் சுடுதல் பக்கம் திரும்பியுள்ளார்.
2018-ல் தனது 19-வது வயதில் ISSF Junior World Cup-ல் தங்கம் வென்றார். 2019 ISSF World Cup-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டிக்குப் பிறகு, சிறிய இடைவெளியில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இனி நல்ல ஓய்வுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூலாகப் பதிலளித்துள்ளார் 27 வயது வீராங்கனை இளவேனில்.
இளவேனிலின் வெற்றி குறித்து பேசிய அவரது தந்தை, "மெடல் வென்றாலும் இல்லை என்றாலும், அவளது இயல்பு மாறாது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது அவளது துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் பதக்கத்தைத் தவறவிட்டாள். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்" என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்