கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சுமார் 2.71 கோடி வாக்காளர்களில் 79.63 சதவீதத்தினர் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இன்று காலை 8 மணி முதல் கேரளா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 140 தொகுதிகளில் போட்டியிட்ட 883 வேட்பாளர்களின் வெற்றி தோல்வி இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றே கணித்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் எனப் பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கடந்த 2021 தேர்தலில் வெறும் 41 இடங்களை மட்டுமே பிடித்திருந்த காங்கிரஸ் கூட்டணி, இந்த முறை 80 முதல் 90 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி, தற்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டது.
மறுபுறம், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) எக்சிட் போல் முடிவுகளால் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணிக்கு, இந்த முறை அதே அளவு இடங்கள் கிடைப்பது கஷ்டம் தான் எனத் தெரிகிறது. எல்டிஎஃப் தரப்பு தங்களுக்கு 75 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கலாம் எனத் தனிப்பட்ட முறையில் கணக்குப் போட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்ததாகப் பினராயி விஜயன் அரசு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தாலும், அது மீண்டும் வெற்றியைத் தருமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வி அடைந்தால் அது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சரிவாகப் பார்க்கப்படும். ஏனெனில், 1960-களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட இடதுசாரி அரசு இல்லாத சூழல் இதன் மூலம் உருவாகும். இதனால் இந்தத் தேர்தல் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாகவே மாறியுள்ளது. ஒருவேளை கணிப்புகளைப் பொய்யாக்கி பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) இந்தத் தேர்தலில் தங்களின் வாக்கு சதவீதத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2021 தேர்தலில் 12.51 சதவீத வாக்குகளைப் பெற்றும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் 19.23 சதவீதமாக உயர்ந்த இவர்களின் வாக்கு சதவீதம், உள்ளாட்சித் தேர்தலில் சற்று குறைந்தது. இருப்பினும், திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தலைநகர் மற்றும் கேரளாவின் மத்தியப் பகுதிகளில் சில இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.