தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 6 மாதங்களை கடந்து விட்டது. சட்ட ஒழுங்கு, நிர்வாகம், அமைச்சர்கள் என பல்வேறு செயல்பாடுகள் அவ்வப்போது விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மற்ற துறைகளை காட்டிலும் தொழில்துறை மிகப்பெரிய அதிருப்திகளை உள்ளாகியுள்ளது என்றே சொல்லலாம். காரணம் முதலீட்டாளர்கள் நிறுவனம் தமிழ்நாட்டை தவிர்த்து தங்களது விரிவாக்க திட்டங்களை ஆந்திராவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதே. இதை தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மறுத்தாலும், தொழில்துறை தமிழகம் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை இழந்து வருகிறது என்றே சொல்லப்படுகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு சென்ற முதலீடுகள் என்று சொல்லப்படுவது, தென்கொரியாவின் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் மூன்று சுமார் 1,614 கோடி ரூபாய் முதலீடுகளை ஆந்திராவில் செய்லபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ஹூண்டாய் மற்றும் கியா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் 'ஹவாஷின், செயோன்' மற்றும் 'ஐவாமெட்' ஆகிய மூன்று கொரிய நிறுவனங்கள், ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஹவாஷின் நிறுவனம் 850 கோடி ரூபாயும், செயோன் நிறுவனம் 514 கோடி ரூபாயும், ஐவாமெட் நிறுவனம் 250 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் 1,418 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றும், அம்மாநிலம் வாகன உதிரிபாக தயாரிப்பு மையமாக மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஜூலை மாதம், ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் விநியோக தொடரில் உள்ள கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் இந்த தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த பெரு நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தில் அமைய சாத்தியக்கூறுகள் இருந்து ஆந்திராவை நோக்கி சென்றதற்கு காரணம், தற்போதைய தவெக அரசின் மீதான நம்பிக்கை இன்மை மற்றும் அணுகுமுறையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 31-வது சிஐஐ கூட்டாண்மை மாநாடு நடைபெற்றது. இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII), மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து இந்தச் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் மட்டும் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் ரூ.9.02 லட்சம் கோடி முதலீடுகளை உறுதி செய்துள்ளது ஆந்திர அரசு.
இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. 59 நாடுகளைச் சேர்ந்த 3,800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 15 வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் இதில் பங்கேற்றனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்க விழாவிலும், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் முக்கிய அமர்வுகளில் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்தும் தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் ஒருவர், “தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து ஆந்திரப் பிரதேசத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்ற கேள்வி விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "உங்களுக்கு மசாலா வேண்டும், எனக்கு ரிசல்ட் வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதில் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததற்கு விஜய் மீதான சினிமா மோகம் மற்றும் ரசிகர்களின் ஆதரவே முக்கியக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கருத்தும் அதே விமர்சனங்களை நினைவுபடுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த முதலீடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் TRB ராஜா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். “ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்த ஆந்திரப் பிரதேசம்.. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டுப் பெற்றிருக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள்” என்று சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளிப்பாரா? அல்லது இந்த விவகாரத்தையும் வழக்கம்போல் கடந்து செல்வாரா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.