சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண மேடையிலேயே குடிபோதையில் இருந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மறுத்த 22 வயது இளம்பெண்ணின் துணிச்சலான முடிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த இளம்பெண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டிய சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கோஸ்மண்டா கிராமத்தைச் சேர்ந்த முஸ்கான் பிரதான் என்ற இளம்பெண்ணுக்கும், கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த சந்த் ராம் (24) என்பவருக்கும் ஜூன் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண ஊர்வலம் மாலை சுமார் 4 மணியளவில் மணமகள் வீட்டை வந்தடைந்தது. இதையடுத்து திருமண நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அப்போது மணமகன் சந்த் ராம் கடுமையான மதுபோதையில் இருப்பதை மணமகள் தரப்பினர் கவனித்தனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், அவரால் சரியாக நிற்கக்கூட முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான் பிரதான், மதுவுக்கு அடிமையான ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்து, திருமணத்தை நடத்த மறுத்துவிட்டார். அவரது இந்த முடிவு திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணமகள் மற்றும் மணமகன் தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், திருமணத்திற்கு வந்திருந்த சில இளைஞர்களுக்கும் மணமகள் குடும்பத்தினருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டது. இதில் சிலர் லேசான காயமடைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் போலீசாரிடம் பேசிய முஸ்கான் பிரதான், நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போதும் மணமகன் மதுபோதையில் வந்ததாகவும், அப்போது அவரது குடிப்பழக்கம் குறித்து தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார். அதற்கு பிறகு மது அருந்துவதை நிறுத்திவிடுவதாக மணமகன் உறுதியளித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட செலவுகளுக்காக சுமார் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மணமகன் தரப்பு ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றுள்ள முஸ்கான் பிரதான், இனி தனது படிப்பைத் தொடர விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் பாண்டே, சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் முன்னிலையில் முஸ்கான் பிரதானை நேரில் அழைத்து பாராட்டினார். மதுப்பழக்கத்திற்கு எதிராக துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் முஸ்கான் பிரதானின் முடிவை வரவேற்றுள்ளனர். திருமண வாழ்வில் பொறுப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் நன்னடத்தை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாகவும், போதைப்பழக்கத்தை சகித்துக்கொள்ளாமல் எதிர்த்து நிற்பவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.