சமீபத்தில் காதல் குறித்த நிறைய மோசமான தகவல்கள் வெளியாகி அனைவரையும் பதற வைத்து வருகிறது. காதலனை ஜூஸ் கொடுத்து கொலை செய்த காதலி, காதலியை ரயிலில் தள்ளிக் கொலை செய்த காதலன், காதலியை வீட்டை விட்டு வரவழைத்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த காதலன் போன்ற செய்திகளும் நிரம்பி வழியும் இந்த நேரத்தில், ஒரு காதலர், தனது காதலை யாரும் வெளிப்படுத்த முடியாத வகையில் வெளிப்படுத்தி அனைவரையும் கண்ணீரில் ததும்ப வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க | "அஃப்தாபுக்கு மரண தண்டனை வழங்கும்வரை ஓய மாட்டேன்"...தந்தை வேதனை!
அசாம் : கவுஹாதியில் ஒரு 27 வயது இளைஞர், தனது மறைந்த காதலியின் சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட இதயத்தை உருக்கும் வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிடுபான் தமுலி என அடையாளம் காணப்பட்ட அந்த வாலிபர், தனது பல நாள் காதலியான பிரார்தனா போரா என்பவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், எந்த சிகிச்சை பலனுமின்றி கடந்த வெள்ளிக் கிழமை, அவர் மரணித்தார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத பிடுபான் தமுலி, பிரார்தனாவின் இறுதி சடங்கிற்கு, திருமணத்திற்கு தேவையான பொருட்களான, குங்குமம், மலர்மாலைகளுடன் பிரார்தனாவின் வீடேறியிருக்கிறார்.
அப்போது, அந்த பெண்ணின் உறவினர்கள் முன்னிலையில், பிரார்தனாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்ததை அந்த பெண்ணின் உறவினர்களால் நம்பமுடியவில்லை. அவர்கள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பே, தனது கையில் இருந்த குங்குமத்தை வட இந்திய முறை படி அந்த பெண்ணின் நெற்றியில் தடவி, மலர்மாலைகளை போட்டு முறைபடி திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க | தமிழச்சியாக மாறிய மலேசிய பெண்.. காதல் செய்த கலாச்சார மாற்றம்...
இதோடு நிறுத்தாமல், அந்த பெண்ணின் நினைவோடே, தனது காலங்களைக் கழிப்பதாகவும், தனிமையில், பிரம்மச்சரியம் காப்பதாகவும், அந்த பெண்ணின் சடலம் முன் சத்தியம் செய்தது தான் அங்கு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. ஒருவரால் இந்த காலத்திலும் இவ்வளவு காதலிக்க முடியுமா என்ற கேள்வி அங்கிருந்த அனவருக்கும் தோன்றவே, அப்போது எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.
காதலுக்காக உயிர் கொடுக்கும் காதலர்களை நாம் இது வரை படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் ஒருவர் தனது காதலிக்காகவே வாழ முடிவு செய்திருப்பது, அனைவரது மனதையும் நெருட வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.