செய்தி

சசிகலாவின் புதிய பயணம்... சாதிப்பாரா? சறுக்குவாரா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நாளை முதல் ”அம்மா வழியில் மக்கள் பயணம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அ.தி.மு.க.வின் தொடர் சரிவுகளுக்கு இடையே, சசிகலா மேற்கொள்ள உள்ள இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதுகுறித்தான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியலில் இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் ஜெ.ஜெயலலிதா. தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஜெயலலிதாவுக்கு பவர் சென்டராக வலம் வந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து 2021 ஜனவரி 27-ம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார் சசிகலா.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோதே, சசிகலா ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் எங்கள் சின்னம்மா சிறையில் இருந்து வரட்டும் என காத்திருந்த அவரது தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வழிநடத்தினர்.

இதையடுத்து ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்ட சசிகலா, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, அவ்வப்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனாலும் சசிகலாவுக்கு சாதகமாக எந்தவொரு பலனும் கிடைத்திருக்கவில்லை.

தொடர்ந்து சென்னையில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சுற்றுப் பயணத்தை தொடங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியது, தஞ்சாவூரில் ஆதரவாளர்களுடன் சந்திப்பு இப்படியாக மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, அரசியல் வருகைக்கான நேரம் வந்து விட்டதாகக் கூறியதோடு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என அடித்துக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனிடையே அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் சசிகலா தலைமையை ஏற்க தயாரானார்.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து 7 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இதுதான் சரியான நேரம், என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகி விட்டது என கூறி அதிர வைத்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர், சசிகலாவுக்கு ரீ எண்ட்ரியெல்லாம் கிடையாது, அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமே கிடையாது என பதிலளித்தனர்.

அதோடு ஜூலை 17-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் இருந்து அம்மா வழியில் அரசியல் பயணம் என்ற ஒன்றை தொடங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்த பயணம் சசிகலாவுக்கு நிச்சயம் வெற்றி பெற்றுத் தரும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், இதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமி.

சசிகலாவின் இந்த பயணம் அவர் சார்ந்த சமூகத்தை ஒருங்கிணைப்பதற்காகத்தான் இருக்குமே தவிர, அ.தி.மு.க.வில் மாற்றம் நிகழ்வது அரிது என்று கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சசிகலா உள்பட அனைவரும் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் அம்மா வழியில் மக்கள் பயணத்தில் சசிகலா சாதிப்பாரா? சறுக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.