தமிழ்நாடு

போலீசிடம் சிக்கிய '10 AK 47'...! சென்னையில் பரபரப்பு... இறுதியில் வெளியான 'ட்விஸ்ட்' சம்பவம் என்ன?

'AK 47' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இருந்தன. இது குறித்து வேன் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்..

மாலை முரசு செய்தி குழு

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னையில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் '10 AK 47' ரக துப்பாகிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாருக்கு அத்துப்பாக்கி குறித்து தெரியவந்த உண்மையால் அவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுகள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நகரம் முழுவதும் வாகன சோதனைகளை கடுமையாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பணம், நகை, சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருக்கின்றனவா? என்பதில் கவனத்துடன் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அசோக் நகர் 2வது அவென்யூ பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில் இது ஒரு சாதாரண சோதனை போல ஆரம்பித்தது. ஆனால், சிறிது நேரத்தில் போலீசார் பார்த்த விசயம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உள்ளே 'AK 47' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இருந்தன. இது குறித்து வேன் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதிர்ச்சியான அளிக்கும் வாக்குமூலம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், சம்பவம் முழுக்க வேடிக்கையாக திருப்பம் பெற்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக களமிறங்கவுள்ள 'DC' திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு பயன்படுத்துவதற்காக 10 AK 47 டம்மி துப்பாக்கிகளை வடபழனியில் இருந்து சினிமா ஷூட்டிங்கிற்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் பயன்படுத்திவிட்டு அந்த துப்பாக்கிகளை மீண்டும் வடபழனிக்கே கொண்டு சென்று போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்த டம்மி துப்பாக்கிகளுக்கான 'லைசன்ஸ்' காண்பிக்கப்பட்டதால் போலீசார் வேனை அனுப்பிவைத்தனர். ஆனால், "சென்னையில் AK 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்ற செய்தி பரவியதன் காரணமாக சில மணிநேரங்கள் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்பு, இவை அனைத்து டம்மி துப்பாக்கி என்று தெரியவந்ததுடன் சிரிப்பலைகளை தந்துவிட்டு சென்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.