நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து பேர் கொண்ட DRI அதிகாரிகள் குழுவினர் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போதை பொருளை ஒழிப்போம் என்று முதல்வர் கூறிய நிலையில் அவரது கட்சி நிர்வாகியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது குறித்து தனது X தளத்தில் கண்டித்து ஒரு பதிவினை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டார்.
அதில் அவர், "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?. ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?.
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?. இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" காட்டமான பதிவினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.