Tamil Nadu investment news 
தமிழ்நாடு

ரூ.1,614 கோடி முதலீடு.. ஆந்திராவுக்குச் செல்கிறதா கொரிய நிறுவனங்கள்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தகவல் நம்பகத்தன்மை பிரிவு!

Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது.

Vinvizhi Leninton

கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு வரவிருக்கும் பல முதலீடுகளும் ஆந்திராவிற்கு செல்வதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அது தொடர்பான ஒரு விளக்கம், தகவல் நம்பகத்தன்மை பிரிவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்; உண்மை என்ன? என்ற தலைப்பில் இருந்து அந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (நவ 2) தனது X பக்கத்தில், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசினை குற்றம் சாட்டினார். மேலும், பல அரசியல் விமர்சகர்களும் இதுபற்றி பேசி இருந்தனர். மேலும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை பலரும் இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்தனர். முக்கிய முதலீடுகள் பல ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறியதால் தவெக அரசு பல விமர்சனங்களை சந்தித்து வந்தது.

இதுவரை வெளியேறியதாக கூறப்பட்ட நிறுவனங்கள்:

  • ராயல் என்ஃபீல்டு (₹2,200 கோடி) - ஆந்திரா

  • 3 கொரிய கார் உதிரிபாக ஆலைகள் (₹1,614 கோடி) ஹ்வாஷின் (Hwashin - ₹850 கோடி), சியோன் (Seoyon - ₹514 கோடி), இவாமெட் (Iwamet - ₹250 கோடி) - ஆந்திராவின் அனந்தபூர்

இதுபோன்ற நிறுவனங்கள் தமிழகம் கைநழுவவிட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது. இதனால் பலபேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வாய்ப்பினையும் தமிழகம் கைநழுவவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, தகவல் நம்பகத்தன்மை பிரிவில் இருந்து, இந்த விவகாரத்தை விளக்கும் படியாக ஒரு பதிவு ஒன்றினை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்; உண்மை என்ன ?

Hyundai நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் Seoyon E-Hwa மற்றும் Hwashin போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன.

ஆந்திராவில் Kia நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது. தற்போது Kia நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர்.

Tamil Nadu investment news

அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் (Automotive Electronics) உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன. இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்நிறுவனங்கள் EV உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை (R&D Centres) தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான Inzi Controls, தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது.

அடுத்தகட்டமாக Hyundai நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை Guidance Tamil Nadu மேற்கொண்டு வருகிறது" என முழுமையாக விளக்கி பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.