தமிழ்நாடு

லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிய டிட்கோ, சிப்காட்...அமைச்சர் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

தொழில் துறையின்கீழ் இயங்கும் காகித நிறுவனம், டிட்கோ, சிப்காட் உள்ளிட்டவை லாபம் ஈட்டக் கூடிய நிறுவனங்களாக செயல்பட்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2-வது மாநிலமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 

தொழில்பேட்டைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை களையும் வகையில், பத்திரப்பதிவு கட்டணத்தில் 2 சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.  திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 

சேலத்தில் புதிய டைடல் பார்க் விரைவில் உருவாக்கப்படும் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய அளவில் தமிழ்நாடு மின் வாகன தலைநகரமாக உருவாகி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இதேபோல், தமிழ்நாடு காகித நிறுவனம், டிட்கோ, சிப்காட் உள்ளிட்டவை லாபம் ஈட்டக் கூடிய நிறுவனங்களாக செயல்பட்டு வருவதாகவும்  அவர் அப்போது கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த உதவும் வகையில் வான்வழி இணைப்புத் திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.