தமிழ்நாடு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்து தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.