தமிழ்நாடு

70 பேருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு: நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கிய அதிகாரிகள்...

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், கையகப்படுத்திய நிலம் அனைத்தும் அரசு புறம்போக்கு நிலங்கள் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

சென்னை, பெங்களூரு நான்கு வழி சாலையை, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு 70 பேரிடம்  வழங்கப்பட்ட இழப்பீடு தொகை 200 கோடி ரூபாயில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா இல்லை என தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்தாண்டு தகவல் தெரிய வந்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

விசாரணையில் அந்த நிலங்கள் யு.டி.ஆர். என்ற அடிப்படை ஆவணங்களில் அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதும், முறைகேடாக இழப்பீடு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இரு முறை இழப்பீடு வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து இழப்பீடு வழங்கிய நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற தாசில்தார் ராதாகிருஷ்ணன், செட்டில்மென்ட் அதிகாரி சண்முகம், தனி தாசில்தார் தேன்மொழி, நில அளவையர் வரதராஜன் மற்றும் பட்டாதாரர்களான அசோக்மேத்தா, செல்வம், விஜயராகவன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விவகாரம் என்பதால், இந்த விவகாரத்தை, சி.பி.ஐ. விசாரிக்க, நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். இழப்பீடு பெற்ற நபர்களுக்கு, நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.