தமிழ்நாடு

மகளிர் உரிமை தொகை; வீடு வீடாக விண்ணப்பம் வழங்க 20,000 பேர் தேர்வு!

Malaimurasu Seithigal TV

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்க 20 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான அரசாணையை நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இந்நிலையில் இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக மொத்தம் ஆயிரம் 20 தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் ஈடுபடுத்த முழுமையாக அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர தாமாக முன்வந்து பணியாற்றும் நபர்களையும், நலச் சங்க நிர்வாகிகளையும் இதில் ஈடுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. 500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த விண்ணப்பங்களை அனைத்து நியாய விலை கடைகளிலும் கொடுத்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்  எனவும் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தியுள்ள உணவு பாதுகாப்பு துறை, வரும் 17ம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.