பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 ஆண்டு போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2022 ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழக அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால், தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது.
44வது செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்தை வென்றதில் தமிழக அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில் 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர் ,வீராங்கனைகளை தமிழ்நாடு வரவேற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.