தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல்: யாரை ஆதரிப்பார்கள் இளம் வாக்காளர்கள்? கணிக்க முடியாத அரசியல் களமாகும் தமிழகம்!

தமிழகத்திலும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது

Muthu Lakshmi

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலம் தேர்தல் திருவிழா களமாக மாறியது. அனல் பறக்கும் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்குறுதிகள் என ஒரே அரசியல் மயமாக  மாறிப்போன தமிழகம், தற்போது தேர்தல் நாளை நெருங்கியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பேசி வந்த முக்கிய சொல்லாடல்  “நான்குமுனை போட்டி" என்பது தான். உண்மையில் அப்படியான ஒரு போட்டி தான் நிலவி வருகிறதா? என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது. தோல்விக்கு பின் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி. மேலும் புதிய வரவான நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் இந்த நிலத்தை கைப்பற்றிய ஆவேன் எனும் லட்சியத்தோடு களமாடும் நாம் தமிழர் சீமான்.

அரசியல் கட்சியினர் அனைவரும் தொகுதி மக்களை சந்தித்து தங்களது தீவிர வாக்கு சேகரிப்பை நிறைவு செய்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். தமிழம் எப்போதும் போல சிந்தித்து வாக்களிக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட ஒரு மாநிலம். இங்கு முடிவுகள் மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நோக்கத்தின் ஒரு படியாகவே இருந்துள்ளது. அதிலும் இந்த முறை அதிகம் கவனம் பெற்ற, அரசியல் சூழல் நிலவி வருகிறது. அரசியல் விமர்சகர்களும் தீவிர கருத்துக்கணிப்புகளை செய்து வருகின்றனர். மேலும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற படை எடுப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. புதுச்சேரியில் நடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்ததை போலவே தமிழகத்திலும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க பெரும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், இவை அனைத்தும் தேர்தலை நகர்த்தும் முறை புதிதாக இருப்பதாகவும் தெரிகிறது.

2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழக வாக்காளர்கள் ஒரே மாதிரியான தீர்மானங்களை எடுக்காமல், அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக் கொண்டே வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 2011ஆம் ஆண்டு எதிர்ப்பு அலையின் தாக்கம் முக்கியமாக இருந்தது; 2016ஆம் ஆண்டு நிலைத்தன்மைக்கு ஆதரவு கிடைத்தது; 2021ஆம் ஆண்டு மாற்றம் தேவையெனும் மனநிலை வாக்காளர்களிடையே வெளிப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு காரணிகள் முடிவுகளை தீர்மானித்துள்ளன. தலைவர்களின் நம்பகத்தன்மை, கூட்டணிகளின் வலிமை மற்றும் அக்கால அரசியல் சூழ்நிலை ஆகியவை இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

தற்போதைய சூழலில், ஆளும் கட்சி தனது ஆட்சிச் சாதனைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து மாற்றத்தைக் கோருகின்றன. மேலும், இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்திருப்பது மற்றும் மூன்றாம் தரப்பு அரசியல் சக்திகளின் வளர்ச்சி ஆகியவை இந்த முறை தேர்தலை அதிக எதிர்பார்ப்புகளுடன் நிறைய கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாற்றியுள்ளன.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் விரிவான மற்றும் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்புகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

மொத்தம் 33,133 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில், 5.67 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர். வாக்குப்பதிவு பணிகளை முன்னெடுக்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சட்ட ஒழுங்கை உறுதி செய்ய 83,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதகவும் தெரிவித்தார். எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், கூடுதலாக விவிபிஏடி (VVPAT) இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் 2,89,60,838 பெண்கள் மற்றும் 2,77,38,925 ஆண்கள் அடங்குகின்றனர். மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 14.5 லட்சத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர். இதற்கிடையில், தபால் வாக்குப்பதிவிலும் கணிசமான பங்கேற்பு பதிவாகியுள்ளது. இதுவரை 4,18,541 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு சீராக நடைபெற தேவையான அனைத்து தளவாட மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.