தமிழ்நாடு

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள்; 25 மின் வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு!

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

Tamil Selvi Selvakumar

காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு மின் வாகனங்கள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின் படி, தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவர்களின் பயன்பாட்டிற்கு முதற்கட்டமாக 25 மின் வாகனங்கள் வழங்கப்படுகிறது. 

சென்னை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மூன்று கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது வழங்கி கவுரவித்தார். மேலும், ஐந்து தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.