தமிழ்நாடு

தீ விபத்தில் காயமடைந்த கணவன், மனைவி, மகன் பலி! சென்னையில் சோகம்!!  

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 16 ஆம் தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் அவரது மனைவி பாத்திமா, மகன் நஹீத் என மூன்று பேரும் சிக்கி படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவியல்  நிபுணர்கள் மற்றும் ஜாம்பஜார் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டு தீப்பரவி படுக்கை அறையில் உறங்கி கொண்டிருந்த மூவர் மீதும் தீப்பற்றியதாக தகவல் தெரியவந்தது.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹீம், பாத்திமா மற்றும் நஹீத் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தீவிபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.