டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 300 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 108 ஆம்புலன்சின் 15 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசுகையில்:
” டெங்குவால் இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 3000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது 300 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே நலமுடன் உள்ளனர். தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை”, என்றார்.
தொடர்ந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மாநில அளவிலான கூட்டம் நடத்த உள்ளோம். அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் எனவும், கட்டிடங்களில் தேங்கும் நன்னீரை தேங்குவதை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய PWD , மாநகராட்சி , வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது உள்ளாட்சி நிர்வாகம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “திருவாரூரில் பயிற்சி மருத்துவ மாணவி இறப்பிற்கு டெங்குவோ, டைபாய்டோ காரணம் அல்ல. காரணத்தை கண்டறிய ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த மாணவி ஏற்கனவே நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார்.
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எல்லையோர மாவட்டங்களில் தீவிரப்படுத்தியுள்ளோம். நிபா அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் இல்லை.
டெங்குவை பொறுத்தவரை எந்த மாவட்டத்திலும் தீவிர பாதிப்பு இல்லை. டெங்கு கட்டுக்குள் உள்ளது. தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம்”, என தெரிவித்தார்.