தமிழ்நாடு

4 பேர், 22 செல்போன்கள்! திருடர்களைப் பிடித்த காவலர்கள்!

சென்னையில் செல்போன் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 22 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை: மண்ணடியைச் சேர்ந்த 22 வயதான ராஜதுரை என்பவர், கடந்த செப்டெம்பர் 12-ம் தேதி கல்லூரி முடிந்து பேருந்தில் பயணம் செய்து ராஜாஜி சாலை ஆவின் பூத் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது, அவரது சட்டை பையில் இருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்துள்ளது. இது குறித்து ராஜதுரை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து செல்போன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலு (33) சத்யா (எ) லொடுக்கு சத்யா (26) மற்றும் திருட்டு செல்போன்களை வாங்கிய குற்றத்திற்காக மண்ணடி பகுதியைச் சேர்ந்த சையது (எ) கோழி (38) தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி (55) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாலு வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவன் தனது கூட்டாளியான சத்யா (எ) லொடுக்கு சத்யா என்பவருடன் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்து பயணிகள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களிடமிருந்து செல்போன்களை திருடி மேற்படி சையது (எ) கோழி மூலம் மருதுபாண்டியன் என்பவனிடம் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.