தமிழ்நாடு

வெல்ல ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மீண்டும் தீ...4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம்!

Tamil Selvi Selvakumar

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெல்ல ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மீண்டும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜேடர்பாளையம்  வடகரை ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான ஒரு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதேபோல் ஜேடர்பாளையத்தில் உள்ள குளத்தில்  திடீரென மீன்கள் செத்து மிதந்ததால், குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில்  முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, கரூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன்,  8 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

முன்னதாக, கரப்பாளையத்தில் கடந்த  11ஆம் தேதி பட்டதாரி பெண் நித்தியா என்பவர் ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளதால் ஜேடர்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.