தமிழ்நாடு

சென்னை பாரிமுனையில் விபத்து: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்...!மீட்கும் பணி தீவிரம்!!

Tamil Selvi Selvakumar

சென்னை பாரிமுனையில் பழமையான 4 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் 4-வது தளத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 

விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மோப்பநாய் உதவியுடனும், நவீன கருவிகளின் உதவியுடனும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என சோதனை மேற்கொண்டனர். 

இதற்கிடையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், பொதுமக்கள் கட்டிடத்திற்கு அருகே செல்லாமல் இருப்பதற்கான பணிகளில் தீவிரமாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.