அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கேக் வெட்டி அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்..ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ். ஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. பொன்விழாவையொட்டி நேற்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இன்று தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு சென்ற அவர், பின் ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியை ஏற்றி வைக்க உள்ளார். ஏற்கனவே தனக்கு பாதுகாப்புக்கோரி அளித்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என குறிப்பிட்டு இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் அ இ அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக்குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.