தமிழ்நாடு

அரசு வேலைக்காக காத்திருக்கும் 72 லட்சம் பேர்...  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  அறிவிப்பு...

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 72 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, அரசு வேலைக்காக 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 லட்சத்து 81 ஆயிரத்து 966 பேர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  38 லட்சத்து 38 ஆயிரத்து 264 பெண்களும்,   224 மூன்றாம் பாலினத்தவர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இவர்களில் 24 முதல் 35 வயது வரையிலான வரம்பில் உள்ளவர்கள் 26 லட்சத்து 88 ஆயிரத்து 55 நபர்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் 36 முதல் 57 வயது பிரிவில்   13 லட்சத்து 10 ஆயிரத்து 976 நபர்களும், 58 வயதிற்கு மேல் 11 ஆயிரத்து 387 நபர்களும் வேலைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 270 மாற்றுத்திறனாளிகளும் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 86 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 699 நபர்களும் அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.