தமிழ்நாடு

"8 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை" கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்!

Malaimurasu Seithigal TV

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 8 தமிழர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை  யாரும் எங்களது உறவினர்கள் காணவில்லை என்கிற புகாரை தமிழ்நாடு கட்டுப்பாட்டு மையத்திற்கோ ரயில்வே துறைக்கோ அளிக்கவில்லை அதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வரும் நிலையில் மையத்தின் செயல்பாடுகளை கண்காணித்த வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று காலை 4.20 மணி அளவில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை தந்தனர். வந்திருந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில் மருத்துவ துறை சார்பாக 10 க்கும் மேற்ப்பட்ட அவசர ஊர்தி ,வீல் சேர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் சென்று அவர்களை வரவேற்கிறோம். அப்போது அதில் 4 நபர்கள் மட்டுமே காயம் அடைந்திருந்தனர். அவர்களை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தோம் சிகிச்சை பெற்ற பின் மூன்று நபர்கள் வீடு திரும்பி விட்டனர் அதில் ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்திற்காக மருத்துவத் துறை சார்பில் தமிழ்நாட்டில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த விபத்தில் 288 பேர் மரணம் அடைந்துள்ளனர் பலத்த காயம் 56 நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் 70 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழர்கள் யாரும் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து, தற்போது வரை ரயிலில் பயணம் செய்த தமிழர்களை தொடர்பு கொண்டு அவர்களின் நிலை பற்றி விசாரணை செய்து வருவதாகவும் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறிய அவர் விபத்திற்குள்ளான 8 நபர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

அதனுடன் தற்போது வரை யாரும் தங்களது உறவினர்களை காணவில்லை என்கிற புகாரை அளிக்கவில்லை. அதனால், தமிழகத்தை சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது என தெரிவித்தார். மேலும் இன்று தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு சிறப்பு ரயில் ஒடிசா விபத்து நடந்த பகுதிக்கு சென்று அங்கிருக்கும் தமிழர்களை மீட்டு வரும் என தெரிவித்தார்.