தமிழ்நாடு

“84.29% வாக்குப்பதிவு – தமிழகத்தில் வரலாற்று மைல் கல்! என்னவாகும் இளம் வாக்காளர்களின் கவனம் பெற்ற தேர்தல் முடிவு?

இந்த முறை “வாக்கு முக்கியம்” என்ற அரசியல் உணர்வு மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது

Muthu Lakshmi

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தமாக 84.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழக தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்றுள்ள 16 சட்டசபை தேர்தல்களில், அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 77.8% சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 2026 தேர்தல் களம் 84.29% சதவீதத்துடன் மைக்கல்லை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, முந்தைய தேர்தல்களை விட இந்த முறை வாக்காளர்களின் ஈடுபாடு கணிசமாக அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் தேர்தல்,SIR  வாக்காளர் பட்டியல் திருத்ததிற்கு பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திருத்தத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் 5.73 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர். இதில் 2,89,60,838 பெண்கள், 2,77,38,925 ஆண்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடியாக (5,67,07,380) உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில், 4.23 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று, முதல் முறை வாக்காளர்களின் அதிக பங்கேற்பு. மொத்தமாக 14.6 லட்சம் (14,59,039) பேர் இந்த முறை முதல் வாக்காளர்கள் ஆவர்.  இது இதுவரை இல்லாத அளவிலான உயர்ந்த எண்ணிக்கையாகும். 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 ஆக இருந்த நிலையில், 84.29% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இதன்படி, சுமார் 4,77,98,651 பேர் வாக்களித்துள்ளனர். அதேசமயம், சுமார் 89,08,729 (15.71) பேர் வாக்களிக்காமல் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள், பெரும்பாலான மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக பங்கேற்றதையும், ஜனநாயக கடமையில் தங்கள் பங்களிப்பை உறுதியாக செய்ததையும் காட்டுகின்றன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் ஆண்டுதோறும் உயர்ந்து வருவது கவனிக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 76.6% வாக்குப்பதிவு பதிவாகியிருந்த நிலையில், 2026-ல் அது 84.29% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வு, தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு போன்ற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. மேலும், கடந்த 2011 சட்டசபை தேர்தலில் 78.01% வாக்குகள் பதிவாகியிருந்தது அதிகபட்சமாக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2026 தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.

முன்னதாக 2021 சட்டசபை தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 6,29,43,693 ஆக இருந்தனர். இதில் 73.63% வாக்குப்பதிவு மட்டுமே பதிவானது. அதாவது 4,63,44,590 பேர் வாக்களித்த நிலையில், 1,65,99,103 பேர் (26.37%) வாக்களிக்கவில்லை. அந்தத் தேர்தலில் திமுக மட்டுமே 133 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

2021 தேர்தலில் வாக்களித்தவர்களின்  எண்ணிக்கை 1,65,99,103 ஆக இருந்த நிலையில், 2026 தேர்தலில் அது 89,08,729 ஆக குறைந்துள்ளது. இந்த பெரிய சரிவு, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மற்றும் கடும் போட்டி அதிகரித்ததை குறிப்பிட்டு காட்டுகிறது. முக்கிய பிரச்சினைகள் மற்றும் கட்சிகளின் தீவிர பிரசாரங்கள், இளம் வாக்காளர்களை நேரடியாக ஈர்த்துள்ளது. மேலும், இந்த முறை “வாக்கு முக்கியம்” என்ற அரசியல் உணர்வு மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. இதனால், தேர்தலில் பங்கேற்பு அதிகரித்து, வாக்களிக்காதோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த முறை தேர்தலில் பதிவான அதிக வாக்குப்பதிவு, மக்கள் அரசியலின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பதையும், தங்கள் உரிமையை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அதிகளவில் வாக்காளர்கள் திரண்டது தேர்தலின் முக்கிய சிறப்பாகும். மொத்தத்தில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், வாக்காளர் பங்கேற்பு, விழிப்புணர்வு மற்றும் ஜனநாயக உறுதிப்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது. இந்த உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம், எதிர்கால தேர்தல்களுக்கும் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. 

மேலும் மாவட்ட வாரியாக பார்க்கும்போது, தமிழகத்தில் அதி பட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மாநில அளவில் மிக உயர்ந்த வாக்குப்பதிவாகும். இதற்கு மாறாக, குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.3% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த வேறுபாடு, பகுதிநேர அரசியல் சூழ்நிலை, நகர்ப்புற-கிராமப்புற வாக்காளர் ஈடுபாடு மற்றும் உள்ளூர் காரணிகள் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்