தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 9 கொலைகள் நடந்துள்ளதாகவும், ரீல்ஸ் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெறும் இரண்டே நாளில் 9 கொலைகள் பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, இன்று மட்டும் 5 கொலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி அண்ணன் - தம்பி இரட்டை படுகொலை, சென்னையில் 26 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள்கள் விற்பதில் ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக நடந்த கொலை, ஓசூரில் குடிபோதையில் தனது சித்தியை கழுத்தை அறுத்து அசோக் என்பவர் கொலை செய்த சம்பவம், மயிலாடுதுறையில் நடத்துநர் ஒருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உட்பட இரண்டு நாட்களில் 9 கொலைகள் நடந்துள்ளது.
இந்த கொலைகள் தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின், பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?.
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார். இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?. இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்