தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் மீது வழக்கு பதிவு!

Malaimurasu Seithigal TV

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதற்காக நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்க வந்திருந்தார். அதே போல  நாம் தமிழர் கட்சியினர் சிலர் வீரலட்சுமி மீது அளித்த புகாரில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சீமான் கட்சியினரை அனைவரும் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் கதவுகளை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேற்றியது. 

உடனே நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமி எதிராக  கோஷமிட்டு (தகாத வார்த்தையால் திட்டி) சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட  நாம் தமிழர் கட்சியினர் மீது வேப்பேரி போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மாவட்ட செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் சசிக்குமார், மணி உள்ளிட்ட 20 பேர் மீது  வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.