தமிழ்நாடு

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிச்சென்ற பெண் காவல் ஆய்வாளர்... மருத்துவமனையில் அனுமதி!

ஈரோட்டில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் நீலாதேவி. நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்ரம்-உஷா நந்தினி என்கிற காதல் ஜோடி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரின் பெற்றோர்களை அழைத்து ஆய்வாளர் நீலாதேவி பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தார். ஆனால், வழியிலேயே சிலர் உஷா நந்தினியை கடத்திச் சென்றனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ஆய்வாளர் நீலாதேவியை வாக்கி டாக்கியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.   

இந்தநிலையில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த நீலாவதி, அங்கிருந்து வெளியேறி அரசு மருத்துவமனை காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த காவலர்களிடம், சாகப் போவதாக கூறி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு,  தேடப்பட்டு வந்த நிலையில் நீலாவதி  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் காரணமாக அவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் என்று ஒரு தரப்பும், பணிச்சுமை காரணமாகவே அவருக்கு இந்த நிலை என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. உண்மைக் காரணம் என்ன என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.