தமிழ்நாடு

மெரினாவில் 6 டன் மணலால் உருவான மணற் சிற்பம்...திறந்து வைத்த முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மணல் சிற்பம்:

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே 
மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 டன் மணல் மற்றும் ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கை விலங்கை உடைத்துக் கொண்டு வெளியே வரும் பெண் உட்பட 6 சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

திறந்து வைத்த முதலமைச்சர்:

இந்த மணல் சிற்பத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார். பின்னர், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம், பெண்களுக்கான இடர்இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம், பெண்களின் பாதுகாப்பிற்கு அனைவரும் உறுதி ஏற்றிடுவோம் என எழுதப்பட்டிருந்த வெண்மை நிறப் பலகையில் முதலமைச்சர் கையொப்பம் இட்டார். அப்போது, அவருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், பொன்முடி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் முதலமைச்சரை தொடர்ந்து  அந்த வெண்மை நிறப்பலகையில் கையெழுத்திட்டனர்.