தமிழ்நாடு

“‘23ம் புலிகேசி’ படம் பார்ப்பது போல..” - தவெக அரசை வடிவேலு படத்துடன் ஒப்பிட்டு பகடி! இடைத்தேர்தலை குறிவைத்து முதல்வர் ரோடு ஷோவா?

அமைச்சர் மரிய வில்சன் பணம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

Muthu Lakshmi

தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள், வாக்குறுதிகள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்டவை நாள்தோறும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், ஆளுநரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறிப்பாக, குதிரை பேரம் குறித்த புகார், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, ஊழல் எனப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்துப் பேசியிருக்கிறார்.?

ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பேசியதாவது, "ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். ஏற்கெனவே அளித்த குதிரை பேர புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.

அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரர் போல யாரோ ஒருவர், ஐந்து கோடி ரூபாய் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களை சினிமா கவர்ச்சியைக் காட்டி ஏமாற்றியதைப் போல, திராவிட ஆட்சிக்கு மாற்றாக நாங்கள் வருவோம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி பல்வேறு மாற்றங்களை உருவாக்குவோம் என்றும் கூறிவிட்டு, தமிழ்நாடு வீழ்ச்சியடையும் மாற்றத்தையே கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தினர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை சிறந்த காவல்துறையாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது கூத்தாடிகள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட அரிசி விலை அதிகமாக இருக்கிறது. 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது. பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க மாட்டோம், நிரந்தர வேலை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். அதேபோல், காலிப் பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றும் கூறினார்கள். ஆனால், தமிழ்நாட்டைத் தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு எங்கே செல்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. நல்ல அதிகாரிகள் அனைவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிக்கொள்ளப் போகிறார்கள்.

நான் அன்றைக்கு தாராபுரத்தில் மாட்டுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த ஆட்சி தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு. ஒரு மாயவலையில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு வாக்களித்தவர்களே தற்போது இதனை உணர்ந்து வருகிறார்கள். கடந்த ஆட்சியில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால், அதைவிடத் தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

கலையரசன் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது. அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். தமிழ்நாடு முழுவதும் சிறுமிகள் காணாமல் போவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏற்கெனவே சினிமாவில் இருந்தவர்கள். மேலும், அவர்கள் அறிவு ரீதியாகவும் தயாராக இருந்தார்கள். தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நிதிநிலைமை கடுமையாக இருக்கிறது. ஆனால், எந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கிறதோ, அங்கே செல்கிறார். நாம் 23ஆம் புலிகேசி படத்தில் பார்த்தது போல, தற்போது நேரிலேயே நடக்கிறது. குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

இந்த ஆட்சி செல்லும் வேகத்தைப் பார்த்தால், விரைவிலேயே வீழ்ந்துவிடும். நிர்வாகத் திறமை என்று எதுவுமே இல்லை. அனைத்து இடங்களிலும் ஊழல் குறைந்தபாடில்லை. யாரெல்லாம் என்னென்ன சொத்துகளைச் சேர்க்கிறார்கள் என்று நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சினிமாவில் நல்லவர் போல வேடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அனைத்தும் சினிமா வசனங்கள்தான். தவறு செய்தவர்களின் கோப்புகள் இருந்தால், கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அமைச்சர் மரிய வில்சன் பணம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், ராஜ்மோகனிடம் பேரம் பேசியதாகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.