சென்னை வானகரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் ஆற்றிய உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் பேசிய விஜய், அன்பு மற்றும் கருணை ஆகியவையே அனைத்திற்கும் அடிப்படை என்றும், இவை இரண்டும் கலந்த வடிவம் தான் தாய் உள்ளம் என்றும் குறிப்பிட்டார். நம் தமிழ்நாடு மண்ணும் அத்தகைய தாய் குணம் கொண்ட மண் தான் என்று கூறிய அவர், ஒரு தாய்க்கு எப்படி எல்லாப் பிள்ளைகளும் சமமோ, அதேபோலத் தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்துப் பண்டிகைகளையும் மக்கள் பாகுபாடின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். வாழ்க்கை முறையும், வழிபடும் முறையும் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் அடிப்படையில் சகோதரர்கள் என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
தான் அரசியலுக்கு வந்த பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்ததற்கான காரணத்தையும் விஜய் விளக்கினார். உண்மையான நம்பிக்கை என்பது நல்லிணக்கத்தை விதைக்கும் என்றும், அது மற்றவர்களுடைய நம்பிக்கையை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் என்றும் அவர் கூறினார். அத்தகைய நம்பிக்கை இருந்துவிட்டாலே எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் வென்றுவிட முடியும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பைபிளில் உள்ள கதைகள் குறித்துப் பேசிய அவர், நம்பிக்கையின் வலிமையை உணர்த்தும் ஒரு குட்டிக் கதையையும் மேடையில் விவரித்தார்.
குறிப்பாக, பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு இளைஞனின் கதையை அவர் சுட்டிக்காட்டினார். "ஒரு இளைஞனின் மீது பொறாமை கொண்ட அவனது சொந்த சகோதரர்களே, அவனைப் பாழும் கிணற்றில் தள்ளிவிட்டனர். ஆனால், அந்த இளைஞன் சோர்ந்து போகாமல், அதிலிருந்து மீண்டு வந்து அந்த நாட்டிற்கே அரசனாக மாறினான். அரசனானது மட்டுமல்லாமல், தனக்குத் துரோகம் செய்த சகோதரர்களையும், அந்த நாட்டையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றினான்" என்று அந்தக் கதையை விவரித்தார். மேலும், "அந்தக் கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை, உங்கள் எல்லோருக்கும் அது நன்றாகத் தெரியும்" என்று அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.
கடவுளின் அருளும், மக்களை மனதார நேசிக்கும் அன்பும், அதீத வலிமையும், உழைப்பும் இருந்தால் எவ்வளவு பெரிய போரையும், எத்தகைய எதிரிகளையும் வெல்லலாம் என்பதையே இந்தக் கதைகள் நமக்கு உணர்த்துவதாக விஜய் தெரிவித்தார். மேலும், தானும் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் சமூக, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் நூறு சதவீதம் உறுதியாக இருப்போம் என்றும், இதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். "மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்" என்று தங்கள் கொள்கைக்குப் பெயர் வைத்ததே இந்த உறுதியின் காரணமாகத்தான் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இறுதியாக, "கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும்" என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசிய விஜய், விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். "வெற்றி நிச்சயம்" என்ற தனது வழக்கமான முழக்கத்துடனும், "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்ற வாசகத்துடனும் அவர் தனது உரையை நிறைவு செய்தார். இந்த விழாவில் மதப் பெரியோர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்